கும்பகோணம் காதல் தம்பதி ஆணவக்கொலை: எவிடென்ஸ் அமைப்பின் கள ஆய்வு அறிக்கை சொல்வதென்ன?!
20 Jun 2022 2 PM | VIKATAN
“ஆணவக் குற்றங்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” என எவிடென்ஸ் கதிர் வலியுறுத்தியிருக்கிறார்.
கும்பகோணம் அருகே துலுக்கவெளி கிராமத்தில் சாதி கடந்து காதல் திருமணம் செய்துகொண்டவர்களை, பெண்ணின் உறவினர்கள் வெட்டி ஆணவக்கொலை செய்த சம்பவம் சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட கொலையாளிகளை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் மதுரை எவிடென்ஸ் அமைப்பின் உண்மை அறியும் குழுவினர் அங்கு சென்று கள விசாரணை நடத்தியுள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள கள ஆய்வு அறிக்கையில் ”கும்பகோணம் சோழபுரம் அருகில் உள்ள துலுக்கவெளி கிராமத்தில் வசித்துவரும் சேகர் – தேன்மொழி தம்பதியருக்கு சக்திவேல், சதிஸ், சரவணன் என மூன்று மகன்களும் சரண்யா என்கிற மகளும் உள்ளனர். சரண்யா பி.எஸ்சி நர்ஸிங் படித்துவிட்டு சென்னையில் சில ஆண்டுகள் செவிலியராகப் பணிபுரிந்துவந்திருக்கிறார்.
சரண்யாவின் தாயார் தேன்மொழி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அவருக்குத் துணையாக மகள் சரண்யா இருந்தார். அங்கு வந்தவாசி பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மனைவி பரமேஸ்வரியும் சேர்க்கப்பட்டிருந்தார். பரமேஸ்வரிக்குத் துணையாக அவரின் மகன் மோகன் உடனிருந்தார். நாளடைவில் சரண்யாவும் மோகனும் அறிமுகமாகி நட்புடன் பேசி இருவரும் காதலித்துவந்துள்ளனர்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
இதற்கிடையே ஐந்து மாதச் சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஏப்ரலில் தேன்மொழி சொந்த கிராமத்துக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார். முன்னதாக, சரண்யாவின் மூத்த அண்ணன் சக்திவேலின் மனைவி அபிநயாவின் தம்பி ரஞ்சித் என்பவரை சரண்யாவுக்கு திருமணம் செய்ய இரு வீட்டாரும் ஏற்கெனவே முடிவெடுத்திருந்தனர்.
அந்த நேரத்தில் சரண்யாவும் ரஞ்சித்தும் காதலித்துவந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் ரஞ்சித்தின் நடத்தை மற்றும் சேர்க்கை சரியில்லை என்பதால் சரண்யாவின் சகோதரர்கள் சதீஸ், சரவணன் ஆகியோர், “ரஞ்சித்தின் நடவடிக்கையும் சேர்க்கையும் சரியில்லை. அவனைத் திருமணம் செய்துகொண்டால் நீ நல்ல வாழ்க்கை வாழ முடியாது” என்று சரண்யாவிடம் அறிவுறுத்தியிருக்கின்றனர். சரண்யாவுக்கும் ரஞ்சித்தின் மோசமான நடவடிக்கை தெரியவந்து ஒதுங்கியிருக்கிறார். இந்த நிலையில்தான் மோகனின் அறிமுகம் கிடைக்க அவருடன் நட்பு ஏற்பட்டு காதலித்துவந்துள்ளனர்.
கொலை
சரண்யாவின் உணர்வுகளைப் புரிந்துகொண்டுதான் அவரின் பெற்றோரும், இரண்டாவது அண்ணனும், தம்பியும் திருமணத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர். ஆனால் மூத்த அண்ணன் சக்திவேல், சரண்யா மீது கடும் கோபத்தில் இருந்ததால் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. சக்திவேலின் மனைவி அபிநயா, `உன் தங்கையால்தான் என் தம்பி வாழ்க்கையை இழந்து நிற்கிறான்’ என்று சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருமணத்துக்குப் பின்னர் மூத்த அண்ணன் சக்திவேலும், அவரின் மனைவியும் அலைபேசியில் தொடர்புகொண்டு, ‘நீங்கள் திருமணம் செய்துகொண்டதால் எங்களுக்கு எந்தக் கோபமும் இல்லை. உன் பெயரில் நகையை அடகுவைத்திருக்கிறோம். நீ வந்தால்தான் மீட்க முடியும். அதை மீட்டுக் கொடுத்துவிட்டு சென்றுவிடு. இருவருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்’ என்று கூறியிருக்கின்றனர். இதை நம்பி சரண்யாவும் மோகனும் கடந்த 13.06.2022 அன்று காலை 8 மணிக்கு துலுக்கவெளி கிராமத்துக்கு வந்தனர்.
சரண்யாவை அண்ணன் சக்திவேல், கும்பகோணத்திலுள்ள அடகுக் கடைக்கு அழைத்துச் சென்று நகையை மீட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். மதிய விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வீட்டில் சரண்யாவின் அப்பா சேகர், அம்மா தேன்மொழி, சக்திவேல், அவர் மனைவி ஆகியோர் இருந்திருக்கின்றனர். பிற்பகல் 3 மணியளவில் சரண்யாவும் மோகனும் ஊருக்குச் செல்ல வீட்டைவிட்டு வெளியே வர, வீட்டின் கதவை வெளிப்புறம் தாழ்ப்பாள் போட்டிருக்கிறார் சக்திவேல். வீட்டுக்குள் அவரது தந்தையும் தாயாரும் கதவைத் திற என்று கூச்சலிட, சக்திவேல் சரண்யாவைப் பார்த்து, `நீங்கள் இருவரும் எப்படி இந்த ஊரைவிட்டுப் போகிறீர்கள்’ என்று பார்ப்போம் என்று கூறிக்கொண்டே செல்போனில் ரஞ்சித்திடம் பேச, அடுத்த ஒரு நிமிடத்தில் ரஞ்சித் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார்.
காவல்துறை விசாரணையின்போது
ரஞ்சித்தும் சக்திவேலும் மோகனை அரிவாளால் வெட்ட சம்பவ இடத்திலேயே இறந்துபோனார் மோகன். தப்பித்து ஓட முயன்ற சரண்யாவை விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளனர். எங்கள் குழுவினரிடம் பேசிய சதீஸ் மற்றும் சரவணன், ‘இதனால்தான் ரஞ்சித் வேண்டாம் என்றோம். தங்கை திருமணத்துக்கு நாங்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவள் நல்ல வாழக்கையைத்தான் தேர்தெடுத்துக்கொண்டாள். எங்கள் அண்ணன் சக்திவேலை ரஞ்சித்தான் மனதை மாற்றி இருவரும் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்துள்ளனர்’ என்று கூறினார்கள்.
சரண்யாவின் தந்தை சேகர், ‘என் மகள் எங்கள்மீது அதிக பாசம் வைத்திருப்பவள். அவளால்தான் மனைவி குணமாகியிருந்தார். சேர்க்கை சரியில்லாதவனோடு எப்படி வாழ முடியும்… அதனால்தான் வேண்டாம் என்றோம்’ என்று கூறினார்கள். மோகனின் உறவினர் பாலஅருண், ரவிகோபால் இருவரும் எமது குழுவினரிடம், ‘மோகன் தன் வாழ்நாள் முழுவதும் தன் அம்மாவுக்காகவே வாழ்ந்திருக்கிறான். மிகவும் அமைதியானவன். இந்தக் குடும்பத்தில் தற்போது யாரும் இல்லை என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது’ என்று கூறினார்கள். என்று கள விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து எவிடென்ஸ் செயல் இயக்குநர் கதிரிடம் பேசினோம். ”அப்பட்டமான ஆணாதிக்க ஆணவப்படுகொலை. இந்தக் கொலை, கடும் கண்டனத்துக்குரியது. சாதிரீதியான படுகொலை அல்ல. இந்தச் சம்பவத்தைத் தட்டையாகப் பார்க்க முடியாது. பல்வேறுவிதமான கூறுகளுடன்தான் ஆராய வேண்டும். ஆணவம் என்றால் சாதி மட்டுமல்ல ஆணாதிக்கம், வர்க்கம், அந்தஸ்து, பாலினம், இனம், மொழி, தொழில், எல்லை போன்ற காரணங்கள் உண்டு. இந்தத் திருமணத்கு சரண்யாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மூன்று சகோதரர்களில் இரண்டு பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மூத்த அண்ணன் சக்திவேல், மைத்துனர் ரஞ்சித்துக்காக இந்தக் கொலையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவருகிறது.
எவிடென்ஸ் கதிர்
இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!
ஒரு பெண், இணைந்து வாழக்கூடிய அல்லது திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு எதிராக குறுக்கீடு செய்தாலோ, வன்முறையில் ஈடுபட்டாலோ அது ஆணவக் குற்றங்களாகத்தான் பார்க்க முடியும். ஆகவே இந்த ஆணவக்கொலைகளுக்கு சாதி ஒரு காரணம் அல்ல என்றாலும் ஆணாதிக்கம் என்கிற காரணம் முக்கியமானது. தலித்துகள் பார்வையிலிருந்து ஆணவக் குற்றங்களை அணுகும்விதம் போன்றே பெண்களின் பார்வையிலிருந்தும் ஆணவக் குற்றங்களை அணுக வேண்டும். இவற்றை குடும்பக் கொலை அல்லது காதலன் கொலை என்று சுருக்கிப் பார்க்க முடியாது. படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் இருவரும் கைதுசெய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
எங்கள் விசாரணை அடிப்படையில் தமிழ்நாடு அரசுக்குச் சில பரிந்துரைகளை முன்வைக்கிறோம். குற்றவாளிகளுக்குப் பிணை கொடுக்கக் கூடாது. தீர்ப்பு முடியும் வரை சிறையில் அடைக்கப்பட வேண்டும். மோகனின் தாயாருக்கு அரசு சிறப்பு கவனமெடுத்து மாதம் ரூ.10,000 பென்ஷன் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு உடனடியாக ஆணவக் குற்றங்களுக்கு என்று தனிச்சட்டம் இயற்றிட வேண்டும்” என்றார்.