ஆணவக்கொலை: “3 வருடங்களாக வழக்கு விசாரணைக்கு வராமலேயே இருக்கிறது’’ – தமிழக அரசுக்கு கௌசல்யா கோரிக்கை
மதுரையிலுள்ள எவிடென்ஸ் அலுவலகத்துக்கு வந்திருந்த கௌசல்யா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இதுவரை விசாரணைக்கு வராமல் கிடப்பில் இருக்கிறது. இது மனதை பாதிக்கிறது. எங்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அப்போது கூறினார். தற்போது சங்கர் ஆணவக்கொலை வழக்கின் விசாரணைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்தவொரு முனைப்பும் காட்டவில்லை.
இந்த வழக்கில் நீதி கிடைத்தால்தான் ஆறுதலாக இருக்கும், இதற்குத் தீர்வு கிடைத்தால்தான் ஆணவப்படுகொலைகள் தடுக்கப்படும். வழக்கு விசாரணை நடைபெற தமிழக அரசு இன்னும் தாமதபடுத்தினால் போராட்டத்தை முன்னெடுப்போம்.
தி.மு.க அரசு இதில் அமைதி காத்தால், சாதிய அரசியல் வாக்குகளுக்கு அஞ்சுகிறது என அர்த்தம். இப்படி அலட்சியம் காட்டினால் உடுமலை சங்கர் கொலைபோல ஆணவப்படுகொலைகள் அதிகரிக்கும். அந்தச் சம்பவத்தின் அருகில் இருந்த சாட்சியாக நான் இருக்கிறேன். முதல் குற்றவாளி விடுவிக்கப்பட்டதன் பின்னணியில் சாதிய அமைப்புகள் இருக்கின்றன. முதல் குற்றவாளி விடுவிக்கப்பட்டபோது அதை அவர்கள் கௌரவமாகப் பார்த்தார்கள்” என்றார்.
எவிடென்ஸ் கதிர் பேசும்போது, “2016-ம் ஆண்டு உடுமலைப்பேட்டையில் பட்டியலின இளைஞர் சங்கர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2016-ல் ஆறு பேருக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. குற்றவாளிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் முதல் குற்றவாளி சின்னச்சாமி 2020-ல் விடுவிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு தமிழக அரசு, சின்னச்சாமி விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சங்கரின் மனைவி கௌசல்யா சார்பிலும் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ஆணவப்படுகொலை வழக்கில் முதல் குற்றவாளி விடுவிக்கப்பட்டபோது கௌசல்யாவைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், இந்த வழக்கில் தமிழக அரசு தலையிட்டு உரிய நீதியை பெற்றுத்தரும் எனத் தெரிவித்தார்.
வழக்கை விரைவாக முடிக்கக் கோரி தமிழக அரசிடம் பல முறை மனு அளித்திருக்கிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விசாரணை தாமதமாகிறது.
கடந்த 20 வருடங்களில் ஆணவக்கொலை வழக்குகளில் இதுவரை ஆறு வழக்குகளில்தான் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் சங்கர் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு மூன்று வருடங்களாக விசாரணைக்கு வராமல் காலதாமதமாகிறது. மாநில அரசு அழுத்தம் கொடுத்தால் ஒரே நாளில் வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம். ஆனால், இதுவரை அதைச் செய்யவில்லை. கடந்த 25 வருடங்களில் ஆணவப்படுகொலை வழக்குகளில் இந்த ஒரு வழக்கு மட்டுமே உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று தாமதமாகிவருகிறது.
ஆணவக்கொலையைத் தடுக்க தனிச்சட்டம் வரும் என 2010-ல் சொல்லப்பட்டது. மத்திய அமைச்சர் எல்.முருகனும் விரைவில் வரும் என்றார். ஆணவப்படுகொலை தனிச்சட்டம் குறித்து பா.ஜ.க எந்த ஆர்வமும் காட்டவில்லை.
ஆணவப்படுகொலை தடுப்பு தனிச்சட்டம் குறித்து எங்கள் சார்பில் அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கியிருக்கிறோம். தமிழக அரசு தனிச்சட்டத்தை இயற்றினால் அனைத்து மாநிலங்களுக்கும் அது முன்மாதிரியாக இருக்கும். அரசியல் வழக்கில் காட்டும் ஆர்வத்தை, தமிழக அரசு ஆணவக்கொலை வழக்கில் காட்ட வேண்டும்” என்றார்.
